நெல்லையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆலாேசனை

நகர்ப்புற தேர்தல் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆயத்த கூட்டம்.

Update: 2021-10-25 11:50 GMT

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனி குமார் தலைமையில் தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற்றது.

விரைவில் நகர்ப்புற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனி குமார் தலைமையில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை சார்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து சில தினங்களே ஆன நிலையில் நகர்ப்புற தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. விரைவில் நகர்ப்புற பகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனி குமார் தலைமையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்ட தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி சார்ந்த இரண்டு மாநகராட்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்திலுள்ள 12 நகராட்சிகள் மற்றும் 103 பேரூராட்சிகளில் நகர்ப்புற தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அதிகாரிகள் தேர்தல் அன்று செயல்படும் விதம் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள கால அவகாசம் குறைவாக உள்ளதால் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை உடனடியாக தொடங்கி வாக்குசாவடிகள் கண்டறிந்து அதனை தயார் செய்தல், வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் 399 வாக்குச் சாவடிகளும், தென்காசி மாவட்டத்திலுள்ள 17 பேரூராட்சிகளில் 356 வாக்குச்சாவடி மையங்களும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் 318 வாக்குச்சாவடி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு 1057 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல நெல்லை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகளில் 37 வாக்குச்சாவடி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் 67 வாக்குச்சாவடி மையங்களும், தென்காசி மாவட்டத்தில் நகராட்சிகளில் 299 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 149 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, திருச்செந்தூர், களக்காடு, சுரண்டை, கொல்லங்கோடு, எழுதேசம் நகராட்சிகள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆளூர் மற்றும் தெங்கம்புதூர் பேரூராட்சிகளில் நகர்ப்புற தேர்தல் தற்போது நடைபெறாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உள்ளிட்ட நகரங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்துவதற்கு நான்கு மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருக்கவும் மாநில தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதன்மை தேர்தல் அலுவலர்கள், முதன்மை தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News