மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சுயமாக வாழ மாநகராட்சி ஏற்பாடு

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சுயமாக வாழ்வதற்கு மீண்டும் இல்லம் என்ற திட்டத்தை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-21 17:21 GMT

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு  மீண்டும் இல்லம் என்ற திட்டத்தை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்ட பலர் சுற்றி திரிகிறார்கள். அவர்களில் பலர் ஒருவேளை  சாப்பாடு கூட கிடைக்காமல் பிச்சை எடுத்தும், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் தூக்கி எறியப்படும் எச்சில் இலைகளை தேடிப்பிடித்து எடுத்து அதி்ல் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவை சாப்பிட்டு வயிற்றை நிரப்புகின்றனர். இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டு உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் சாலைகளில் சுற்றி திரியும் நபர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர்களை பாதுகாக்க திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குறுக்குத்துறை, டவுன், மகாராஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மாநகராட்சி ஊழியர்கள் இந்த இல்லங்களுக்கு அழைத்து வருகிறார்கள். அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக பராமரிக்கப்பட்டு அவர்கள் மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைய தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் அடிப்படையில் குணமடைந்த ஏராளமானோர் மீண்டும் அவர்களது உறவினர்களிடம் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் குணமடைந்தும் மீண்டும் தங்கள் உறவுகளால் தொடர்ந்து அவர்கள் புறக்கணிக்கப்படும் அவலம் இருந்து வருகிறது.

அவர்களுக்காக திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மீண்டும் இல்லம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி இன்று மீண்டும் இல்லம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலமாக வாடகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5 பேர் - 10 பேர் என தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிப்பதற்கு ஒரு இல்லத்திற்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வீடுகளில் அவர்களே அவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ளவும், மகிழ்ச்சியாக இருக்கவும்,  அக்கம் பக்கத்தினருடன் உரையாடவும் வசதியாக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது - சோயா தொண்டு நிறுவனத்துடன்  இணைந்து சாலைகளில் ஆதரவில்லாமல் சுற்றி தெரியும் நபர்களை மீட்டு அவர்களை குணப்படுத்தி மீண்டும் அவர்கள் குடும்பத்தில் இணைந்து வாழ வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த ஆண்டு 85 பேரை மீட்டு, 58 பேரை குடும்பத்தில் சேர்த்து விட்டோம். மீதமுள்ளவர்கள் பல்வேறு காரணங்களால் அவர்களின் குடும்பத்தில் ஒப்படைக்க முடியவில்லை. எனவே அவர்களும் வாடகை வீடு எடுத்து சக மக்களுடன் சேர்ந்து வாழ இந்த திட்டம் தொடங்கியுள்ளோம். அவர்கள் வழக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார். சோயா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சரவணன் இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் திருநெல்வேலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News