நெல்லையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு

வரும் காலத்தில் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு இடங்களில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்

Update: 2021-11-28 07:30 GMT

நெல்லை மாவட்டத்தில் பெய்த  மழையின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை நெல்லை மாவட்ட பேரிடர் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அபூர்வா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் கால சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அபூர்வ  ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை டவுன் பகுதியில் இருக்கும் நெல்லை கால்வாய், காட்சி மண்டபம், அபிராமி நகர், கிருஷ்ண பேரி குளம், கண்டியபேரி குளம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் அவர் கூறியதாவது:  நெல்லை மாவட்டத்தில் எதிர்பாராத அளவில் அதிக மழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது. ஏற்கனவே பருவமழை காலத்தில் பெய்த கன மழையால் அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகளவு மழையால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கபட்டது. கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளால் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.

மழையினால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள சாலைகள் சிதலமடைந்து உள்ளதை தற்காலிகமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக சாலைகளில் தற்காலிகமாக செப்பனிடுவதிலும் சிரமம் இருந்து வருகிறது.

இருப்பினும் ஜல்லி, மணல் கொண்ட கலவை மூலம் சாலைகளை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் இதுவரை 162 கி.மீ சாலைகளில் முதல் பகுதி பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்று சாலைகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது பெய்த தொடர் மழையினால் இதுவரை 2 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News