இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு; பாதிரியார் உருவபொம்மை எரிக்க முயற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தை பேசியதாக பாஜக இளைஞர் அணியினர் அவரது உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர்.

Update: 2021-07-22 14:32 GMT

பாதிரியாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற நெல்லை பாஜக இளைஞரணியினர்.

பொது இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கன்னியாகுமரி பாதிரியாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி நெல்லை பாஜக இளைஞரணியினர் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாதிரியார் ஜான் பொன்னையா. இவர், இந்து மதம் பற்றியும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பொது மேடையில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த விவகாரத்தில் பாதிரியாரை கண்டித்து பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் வேல் ஆறுமுகம் தலைமையில் நெல்லை மாவட்ட பாஜகவினர்  இன்று ஆர்பாட்டம் நடத்தினர். டவுன் சந்தி முக்கு பிள்ளையார் கோவில் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, மறைத்து வைத்திருந்த பாதிரியாரின் உருவபொம்மையை பாஜகவினர் தீ வைத்து எரிக்க முயற்சித்தனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உருவ பொம்மையை எரிக்க விடாமல் கைப்பற்றினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் பாதிரியாருக்கு பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் வேல் ஆறுமுகம் கூறுகையில், ஏற்கனவே மதரீதியாக பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார் ஜான் பொன்னையா மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

தமிழகத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களை பிச்சைக்கார்ர்கள் என்று சொல்லியும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய பாரதமாதா மற்றும் பூமித்தாய் குறித்தும் கேவலமாக பேசியதால் ஜான் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக அவரை கைது செய்யாவிட்டால், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பாஜக இளைஞரணி சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News