அதிமுக வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

ஆளுங்கட்சியால் அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்

Update: 2022-02-28 10:30 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா

நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் திருக்குறுங்குடி பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை கடத்துவதற்கு ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், நாளை மறுதினம் நடைபெறும் பதவியேற்பு விழாவின் போதும், மறைமுக தேர்தலின் போது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என நெல்லை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையிலான நிர்வாகிகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22 ம் தேதி எண்ணப்பட்டது. இதில் நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அமைந்துள்ள 18 இடங்களில் 9 இடத்தை அதிமுகவும், 1 இடத்தை பாஜகவும் கைப்பற்றியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 நபர்களும், திமுகவை சேர்ந்த 2 நபர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இது தவிர தேமுதிகவை 1 நபர் மற்றும் சுயேட்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.இதே போல் திருக்குறுங்குடி பேரூராட்சியில் உள்ள 15 இடங்களில் திமுகவினர் 5 இடங்களிலும், அதிமுகவினர் 4 இடங்களிலும், சுயேட்சைகள் 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

 திசையன்விளை மற்றும் திருக்குறுங்குடி பேரூராட்சியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர்களையும், அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் சிலரையும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கடத்த முயற்சி செய்வதாக கூறி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் தச்சைகணேச ராஜா தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா கூறியதாவது: அதிமுக சார்பில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களை பதவி ஏற்க வரும் போது ஆளும் கட்சியினர் அவர்களை கடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்  பேரூராட்சி மறைமுக தேர்தல் நடக்கும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி ஜனநாயக முறைப்படி மறைமுக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News