நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில் கைது

நெல்லை குவாரி புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் மங்களூரில் கைது செய்தனர்.

Update: 2022-05-20 12:16 GMT
கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார்.

நெல்லை மாவட்டம், அடுத்த அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு ராட்சத பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் இணைந்து ஐந்து பேரை மீட்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆறாவது நபரை தேடும் பணி தீவிரமாக 6 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குவாரி விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 3 பிரிவின் கீழ் குவாரி உரிமதாரர் சங்கரநாராயணன், குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார், குவாரி மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சங்கர நாராயணன் மற்றும் மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் குமார் ஆகியோரை ஏஎஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படை அமைத்து கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் திசையன்விளையில் உள்ள செல்வராஜ் மற்றும் குமாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அடை மிதிப்பான் குளத்தில் உள்ள குவாரி அலுவலகத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து தனி படை போலீசார் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லைக்கு அவர்களை அழைத்து வரும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News