நெல்லை: உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

மேல்நிலை தொழில் கல்வி பாடப்பிரிவில் உடற்கல்வி பாடத்தை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2021-08-10 15:11 GMT

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை, மாநிலத் தலைவர் தேவி செல்வம், மாநில பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாநில செயலாளர் ராஜா சுரேஷ், தலைமை நிலைய செயலாளர் ரஹீம், தென்சென்னை கல்வி மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு விவேகானந்தம், சென்னை மாவட்ட பொருளாளர் ருக்குமாங்கதன், வட சென்னை கல்வி மாவட்ட பொருளாளர் ராகவேந்திரன், சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் நெல்சன், மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பள்ளிக்கல்வி பயிலும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் விலையில்லா உடற்கல்வி புத்தகம், விளையாட்டு உபகரணம் வழங்கல் வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் 32 முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் 2 பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

அனைத்து பள்ளிகள் (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி) புதிய உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கி உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் . பள்ளிக்கல்வித்துறை பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள் கல்வித்துறை பணியாளர்கள் டிஆர்பி தேர்வுக்கு 10 சதவீத ஒதுக்கீடு போல், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பதவிக்கு 10 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டன. தொடர்ந்து இது குறித்து ஆணையர் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News