நெல்லையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது; தனிப்படை போலீசார் அதிரடி

நெல்லை தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்தனர்.

Update: 2021-08-28 16:24 GMT

25 கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஐகோர்ட் ராஜா.

நெல்லை மாவட்டம், பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் ஹரிஹரன், உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பேட்டை, கருங்காடு சாலையில் உள்ள கல்லறை தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக ஒரு நபர் கையில் இரண்டு சாக்கு மூட்டையுடன் நின்றுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், களக்காடு அடுத்த சிங்கிகுளம் பகுதியை சேர்த்த ஐகோர்ட் ராஜா என்பதும், மதுரையில் இருந்து 50 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து அதில் 25 கிலோவை விற்று விட்டு மீதமுள்ள 25 கிலோ கஞ்சாவுடன் நின்றபோது போலீசாரிடம் மாட்டிக் கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஐகோர்ட் ராஜாவை கைது செய்து, அவரிடமிருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் நெல்லை மாநகர காவல்துணை ஆணையர் சுரேஷ்குமார் பேட்டை காவல் நிலையம் வந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிட்டார். இதற்கிடையில் ஏற்கனவே சிறையில் உள்ள குற்றவாளிகளின் கூட்டாளியாக ஐகோர்ட் ராஜா செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய துணை ஆணையர் சுரேஷ்குமார், நெல்லை மாநகர் பகுதியில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். அதன்பேரில் ஏற்கனவே சிறையில் உள்ள பேட்டை மணி, சுந்தர், தினேஷ், சரண்யா ஆகியோரின் கூட்டாளியான ஐகோர்ட் ராஜா இன்று 25 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தாலோ, சூதாட்டம் ஆடினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இன்று கூட ஒரு லட்சம் ரூபாய் சூதாட்டம் ஆடிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் நடப்பது தெரியவந்தால் பொதுமக்கள் என்னை 9498166566 என்ற தொலைபேசி எண்ணில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.

ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை விவகாரத்தில் சிறையில் உள்ள பேட்டை மணி தான் முக்கிய குற்றவாளியாக இருந்து வருகிறார். நெல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வைக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News