நெல்லை மாவட்டத்தில் தாமதமான விடுமுறை அறிவிப்பு: பள்ளி மாணவர்கள் தவிப்பு

நெல்லையில் தாமதமான விடுமுறை அறிவிப்பால் பள்ளியில் இருந்து மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் மழையில் நனைந்தபடி சென்றனர்.

Update: 2021-11-25 11:21 GMT

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நெல்லையில் வெளுத்து வாங்கும் கனமழை தாமதமான விடுமுறை அறிவிப்பால் பள்ளியில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமம்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி பெய்த அதி கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மழை சற்று ஓய்ந்த காணப்பட்ட நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் இருண்டு கருங்கடலாக காட்சி அளித்தது. பின்னர் பிற்பகல் 12 மணிக்கு மேல் மாநகர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. நெல்லை பேட்டை, டவுன், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, சமாதானபுரம், கேடிசி நகர், தச்சநல்லூர், மேலப்பாளையம், பெருமாள்புரம் என நகர் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதற்கிடையில் மழையின் மிரட்டல் காரணமாக இன்று நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில் காலை எந்த அறிவிப்பும் வராததையத்து மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். பின்னர் பிற்பகல் பெய்த மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பிற்பகல் முதல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். முதன்மை கல்வி அலுவலர் மூலம் இத்தகவல் அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் வகுப்புகள் முடிந்தவுடன் மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

அதேசமயம் உரிய திட்டமிடல் இல்லாமல் பிற்பகலில் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளியில் மாட்டிக் கொண்ட மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமப்பட்டனர். பலர் குடை மற்றும் மழை கோர்ட் எதுவும் கொண்டு வராததால் மழையில் நனைந்தபடி சாலைகளில் சென்றனர். பல்வேறு பள்ளிகளில் விடுமுறை குறித்து பெற்றோர்களிடம் உரிய தகவல் அளிக்காததால் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சில பள்ளிகளில் மட்டும் மழை குறையும் வரை மாணவர்கள் பள்ளியில் அமர வைக்கப்பட்டனர். பெரும்பாலான தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் அவசரமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டதால் சாலையில் முழங்கால் அளவு தேங்கி கிடந்த தண்ணீரில் மிதித்தபடி ஆபத்தான முறையில் வீட்டிற்கு சென்றனர்.

குறிப்பாக பாளையங்கோட்டை, அண்ணாநகர், வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் மழையில் நனைந்தபடி சாலைகளில் சென்றனர். மாணவர்கள் சிலர் விளையாட்டாக சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் இறைத்து ஊற்றி விளையாடி படி சென்றனர். சாலைகளில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி கிடந்ததால் பேருந்து மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்ற மாணவர்களும் அதில் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். ஏற்கனவே ஐந்து தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் முன்னதாகவே முழுநேர விடுமுறை அளித்திருந்தால் மாணவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

தொடர்ந்து நெல்லையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. முனைஞ்சிப்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி நெல்லையில் அதிகபட்சம் நெல்லை மாநகரில் 47 மில்லி மீட்டர் மழையும், ராதாபுரத்தில் 40 மிமீ, நாங்குநேரியில் 30 மிமீ, சேரன்மகாதேவி 31 மிமீ, பாளையங்கோட்டை 30 மிமீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News