ரூ.200 கோடி நிதி நிறுவன மோசடி: தமிழகம் முழுவதும் போலீசார் சோதனை

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த தொகை ரூ. 200 கோடியை தாண்டியது. பல இடங்களி்ல் தேனி குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு நடத்தினர்.

Update: 2022-06-22 09:37 GMT

திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் கோவையை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், பெங்களூரு உட்பட பல இடங்களில் இந்த நிதி நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. வத்தலக்குண்டை சேர்ந்த ஆனந்த் என்பவர் தேனி கிளைக்கு மேலாளராக உள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் மட்டும் 64 பேரிடம் 4.5 கோடி ரூபாய் டெபாசிட் பெற்றுள்ளார். மாநிலம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 800 பேர் 17 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது. தேனி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி தொகை 200 கோடி ரூபாயினை தாண்டி உள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தேனி அலுவலகம் சில மாதங்களுக்கு முன்னர் முன் அறிவிப்பின்றி மூடப்பட்டது. இது குறித்து சிவக்குமார், இந்திரா உட்பட பலர் தேனி குற்றப்பிரிவில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துச்சாமியை கைது செய்தனர். தேனி கிளை மேலாளர் ஆனந்தை தேடி வருகின்றனர்.

இந்த மோசடி தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சுந்தர்ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சீமைராஜ், ராமலட்சுமி, ரமேஷ், பிச்சைப்பாண்டியன், சவுந்திரபாண்டியன் ஆகியோர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கோவை, ராமநாதபுரம், மதுரை, ரெட்டியார்சத்திரம், நாகர்கோயில் ஆகிய இடங்களில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வில் ஏராளமான டாக்குமெண்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த டாக்குமெண்ட்டுகள் அடிப்படையில் மோசடி நடந்த தொகையின் அளவு இன்னும் பல மடங்கு உயரலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News