ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 59 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

Update: 2020-12-30 07:30 GMT

ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 59 கிலோ கஞ்சாவை தஞ்சாவூர் அருகே நுண்ணறிவு பிரிவு போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்து, காரிலிருந்த 3 பேரை கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்திவரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஓசிஐயூ டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தஞ்சை சரக ஆய்வாளர் இலக்குமணன், திருச்சி ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சக்திகுமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீஸார் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேகமாக வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டாடா இன்டிகா காரை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தனர். ஆனால், கார் நிற்காமல் போலீஸாரை கடந்து விரைந்து சென்றது. இதையடுத்து போலீஸார் அதை விரட்டிச் சென்று செங்கிப்பட்டி அருகே மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.

அச் சோதனையில், காரில் ரகசிய அறையில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன் மொத்த எடை சுமார் 59 கிலோ ஆகும். அவற்றை கைப்பற்றிய போலீஸார், இது தொடர்பாக காரில் இருந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சின்னராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர ரெட்டி (49), ஒடிசா மாநிலம் பலேஸ்வர் மாவட்டம் முலக்குடே கிராமத்தைச் சேர்ந்த திவாகரசிலா (37), பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பிரபு (27) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் மூவரும் நாகை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் பரத் ஸ்ரீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags: