கந்து வட்டி கொடுமை! தனியார் நிறுவனங்கள் மீது பெண்கள் புகார்!

அதிக அளவில் கந்து வட்டி வசூல் செய்து கொடுமை படுத்துவதாக தனியார் மகளிர் சுய உதவிக்குழு தொண்டு நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

Update: 2023-06-06 04:12 GMT

பட விளக்கம்: தனியார் தொண்டு நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த பெண்கள்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் கந்து வட்டி வாங்குவதாக கூறி 20க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் சில தனியார் நிறுவன மகளிர் சுய உதவிக் குழு தொண்டு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக அப்பாவி பெண்களிடம் குறைந்த வட்டிக்கு பணம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் வாங்கும் கடனுக்கு 11% வட்டி என போலியான வாக்குறுதிகள் கொடுத்து  20% முதல் 40% என்ற விகிதத்தில் வசூல் செய்து வருகின்றனர்.

இதற்கு நீதி கேட்டு  முதல்வர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியரான தங்களுக்கும் தபால் மூலம் மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவின் மீது கடையம் காவல்துறை அதிகாரி நடத்திய விசாரணையில் அந்த நிறுவனம் அரசு அனுமதி பெற்று இருக்கிறது எனவும் இதனால் நியாயம் கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து வட்டி கும்பல்களிடம் வரவு செலவு வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். இதை ஏற்று அரசு அனுமதி அளித்த மகளிர் சுய உதவி குழுவில் பெண்கள் இணைந்தனர். ஆனால் இன்னும் சில கந்துவட்டி கும்பல்கள்  தொண்டு  நிறுவனங்கள் எனும் பெயரில் பதிவு செய்துகொண்டு அப்பாவி பெண்களை மிரட்டி வருகின்றனர். எனவே இது போன்ற மக்களை சீரழிக்கும் கந்துவட்டி கும்பலை கண்டறிந்து நிரந்தரமாக அவர்களை தடை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவினை கடையம் வட்டார காங் மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Tags:    

Similar News