தூத்துக்குடி வாலிபர் தென்காசியில் கொலை: 4 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு

கடந்த 3-ஆம் தேதி முதல் அரவிந்தை காணவில்லை என கூறி உறவினர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-12-08 15:15 GMT

 தென்காசியில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அரவிந்த்.

தூத்துக்குடி வாலிபர் அரவிந்த் தென்காசியில் கொலை. 4 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் அரவிந்தன் (29). இவர் அதே பகுதியில் வசித்து வரும், தென்காசியை சேர்ந்த பெண் ஒருவரை கலப்பு திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பூர்வீகமாகும். இந்நிலையில் அரவிந்த் தென்காசி பகுதியில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி முதல் அவரை காணவில்லை என கூறி உறவினர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சந்தேகப்படும்படியான சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் புலியூர் கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரியிடம் கீழபுலியூரை சேர்ந்த பொன்னரசு என்பவர் அரவிந்தனை கொலை செய்து அருகில் உள்ள கல்குவாரியில் உள்ள குளத்தில் போட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் இறந்து போன அரவிந்தின் உடலை மீட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வேட்டைக்காரன் குளத்தைச் சார்ந்த மணிகண்டன் என்பவர் மூலம் தென்காசியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி வேலை தேடி உள்ளார். அரவிந்தை கடந்த 04.12.2022 அன்று அதிகாலை கத்தியால் குத்தி கொலை செய்து கல்குவாரி குளத்தில் அரவிந்தன் உடலோடு கல்லை கட்டி வீசி உள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கீழபுலியூரை சேர்ந்த சீதாராமன், வேட்டைக்காரன்குளம் மணிகண்டன், கீழபுலியூரை சார்ந்த பொன்னரசு, தம்பிரான், அருணாச்சலம் ஆகியோரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பகராஜ், தனிப் பிரிவு தலைமை காவலர் முத்துராஜ், தலைமைக் காவலர் வடிவேல் முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பெண்ணின் உறவினர் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News