தென்காசி-திருநெல்வேலி நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

தென்காசி திருநெல்வேலி நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை.

Update: 2021-08-25 05:59 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், திமுக மாநில மருத்துவர் அணி தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று கோரிக்கை மனுக்களை அளித்தார்.

அந்த மனுவில்  தெரிவித்திருப்பதாவது,  

திருநெல்வேலி தென்காசி நான்கு வழிச்சாலை பணியில் ஏற்கனவே திருநெல்வேலி முதல் ஆலங்குளம் வரை சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. தற்போது ஆலங்குளம் தென்காசி சாலையோரங்களில் மரங்களை வெட்டப்பட இருக்கின்றன. அந்த மரங்களை வெட்டாமல் மறு நடவு முறையில் மாற்று ஏற்பாடு செய்து மரங்களை பாதுகாத்திட வேண்டும், அதேபோல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிப்பன்குளம் ஊராட்சி சண்முகாபுரத்தில் கடந்த ஜூலை மாதம் கூலித்தொழிலாளி தர்மராஜ் அவரது மகன் புவன் மற்றும் கண்ணன் என்பவரது மகன் இஷாந்த், பூபாலன் மகள் சண்முகப்பிரியா ஆகிய மூன்று குழந்தைகளும் சண்முகாபுரத்தில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்து விட்டனர்.

அதில் பாதிப்படைந்த மூன்று குடும்பத்தினருக்கும்  முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் வழங்கும்படியும்,  அதேபோல கடையம் ஒன்றியம் சிவசைலம் ஊராட்சி புதுக்குடியிருப்பு  திரவியம் என்பவரின் மகன் சுப்பிரமணியன் ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு திட்டத்தில் கடந்த 21ஆம் தேதி நாணல் தரிசு ஓடை கால்வாயில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு இறந்து விட்டார்.

பணியில் இருந்த இவருக்கு  பத்திரகாளி என்ற மனைவியும் இசக்கிமுத்து என்ற மகனும் உள்ளனர். பணியின் போது உயிரிழந்த  இவரது குடும்பத்தாருக்கு  உரிய இழப்பீடு தொகை கிடைக்கவும், அவரது மனைவிக்கு அல்லது வாரிசுக்கு அரசு வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனுவில் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்திருந்தார். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்திருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பூங்கோதை ஆலடி அருணா  ஆறுதல் கூறி உரிய இழப்பீடு கிடைக்க வழி செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News