தென்காசி: ஜெய்பீம் திரைப்பட இயக்குனர், நடிகர் சூர்யா மீது பாமகவினர் புகார்

நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல்ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி எஸ்.பி.யிடம் பாமக-வினர் புகார் மனு.

Update: 2021-11-20 02:33 GMT

நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல்ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி எஸ்பி அலுவலரிடம் பாமக-வினர் புகார் மனு அளித்தனர்.

வன்னியர்களை இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல்ராஜா மிது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரிடம் பாமக-வினர் புகார் மனு அளித்தனர்.

சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் தமிழ் நாட்டில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சங்கத்தை அவமதிக்கும் வகையில் ஜெய் பீம் திரைப்படத்தை திட்டமிட்டு தயாரித்து ஓடிடி-யில் வெளியிட்டுள்ளார்கள்.

சினிமா படைப்பு என்பது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்காமல் இருப்பது ஒவ்வொரு கலைஞரின் தார்மீக கடமையாகும். ஆனால் ஜெய் பீம் திரைப்படம் சமுதாயத்துக்குள் வன்முறையை தூண்டும் வகையில் திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர். எனவே வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி சமுதாயத்திற்குள் வன்முறையை தூண்டும் வகையில் திரைப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர்கள் அய்யம்பெருமாள், சேது. அரிகரன், மாவட்ட செயலாளர் சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்வில் மாநில இளைஞரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மகாராஜன், கருப்பசாமி, நகர செயலாளர்கள் சங்கர், அய்யப்பன், பரமசிவன், ஒன்றிய தலைவர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News