தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது

Update: 2022-07-21 13:00 GMT

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா , முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி வழங்குதல் , மீனவர்களுக்கு குளிர்சாதன பெட்டி மற்றும் மீன்பிடி வலைகள் என 97 பயனாளிகளுக்கு ரூ.35, 56,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், தென்காசி மாவட்டம் புதியதாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. இம்மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் நின்று விடாமல் இருக்க என்னை பொறுப்பு அமைச்சராக முதலமைச்சர் நியமித்துள்ளார். அதன் அடிப்படையில் புதிய ஆட்சியர் வந்த பிறகு இந்தப் பணிகளை இன்னும் விரைவு படுத்த ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து நமது மாவட்டத்திற்கு கொண்டுவர வேண்டிய அலுவலகங்கள் நிறைய இருக்கின்றன. அந்த அலுவலக அதிகாரிகள் இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நிர்வாக ரீதியாக சில அலுவலகங்களில் இங்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் தென்காசிக்கு கொண்டு வந்து விடுவோம். மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அதனையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சதன் திருமலை குமார், ராஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News