கடையநல்லூரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

Increasing corona infection in Kadayanallur

Update: 2022-06-25 11:00 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட வருவாய் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனருமான சஞ்சோங்கம் சடக் சிரு கலந்து கொண்டார். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டதா? அதில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்கள் எத்தனை உள்ளிட்டவை குறித்தும் தென் மேற்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்  தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்  கூறியதாவது :வருவாய் பேரிடர் மீட்பு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இணையதள வழியில் வழங்கப்படும் சான்றிதழ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். மேலும் கடையநல்லூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசிகள் செலுத்தி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

கொரோனா முதல் தவணை தடுப்பூசியில் 90 சதவிகிதம் முடிவுற்றுள்ளது. இரண்டாவது தவணையில் 12 முதல் 14 வயது வரையிலும், 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை முழுமையாக எடுத்து கொள்ள வேண்டும். கடையநல்லூரில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. நாள் ஒன்றுக்கு 100 மாதிரிகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 1000 மாதிரிகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களை அதிகம் சந்திக்கும் வணிகர்களிடமும் மாதிரிகள் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

கொரோனா சோதனையை அதிகப்படுத்தி கொரோனா பரவலை ஒரிரு வாரங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தளமான குற்றாலத்தில் சீசன் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் போது கொரோனா விதிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News