கூடுதல் வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்

தென்காசி அருகே அரசு பள்ளியில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், மரத்தடியில் அமர்ந்து கல்வி பயிலும் குழந்தைகள்.

Update: 2022-06-23 11:28 GMT

மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்.

தென்காசி அருகே மேல்நிலைப்பள்ளியில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், மரத்தடியிலும், கிராம சேவை மையத்திலும், நூலகத்திலும் அமர்ந்து கல்வி பயிலும் குழந்தைகள். புதிய கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி அருகே வினைதீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 1987-ஆம் ஆண்டு ஆரம்ப பள்ளி கட்டப்பட்டு அதன்பின் நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு 2005-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி, 2018 - ஆம் ஆண்டு நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வருடம் இந்தப் பள்ளியில் சுமார் 800 மாணவ மாணவிகள் சேர்க்கைக்கு வந்துள்ளனர். ஆனால் பள்ளியில் கட்டிட வசதி, ஆய்வக வசதி, விளையாட்டு மைதானம் என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாததால், அரசு பள்ளியில் ஆர்வமுடன் சேர வந்த மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மரத்தடியில் அமர வைத்து கல்வி கற்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இங்கு போதிய கட்டிட வசதி இல்லாததால் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்திலும், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்திலும், நூலக கட்டிடத்திலும் அமர்ந்து மாணவ மாணவிகள் பயிலும் சூழல் உள்ளது. தற்போது இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில், 273 மாணவர்களும், 282 மாணவிகளும் மட்டுமே பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சேர இயலாத மாணவர்கள் ஆவுடையானூர், பாவூர்சத்திரம், புல்லுக்காட்டுவலசை போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதே பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது அதில் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் பயில புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News