பேருந்து பயணிகளே உஷார்: தென்காசி முழுவதும் திருட்டு கும்பல் அதிகரிப்பு

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் உஷாராக இருக்க வேண்டும் என தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-08-28 14:23 GMT

தற்போது தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் குறுகிய காலத்தில் அதிகமான அளவு பேருந்தில் பணம் மற்றும் உடமைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது.

இவ்வாறு பேருந்தில் பணம் மற்றும் உடமைகளை திருடிய வழக்கில் கைதானவர்கள் பெரும்பாலும் வேறு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக மதுரை. இவர்கள் நெரிசல் மிகுந்த பேருந்துகளில் குழுக்களாக பிரிந்து கை வரிசையை காட்டுகின்றனர். இவர்கள் உங்கள் அருகில் நெருக்கமாக அமர்ந்து உங்களின் தொலைபேசி, மணிபர்ஸ், குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் போன்றவற்றை குழுவாக இணைந்து திருடுகின்றனர்.

இவ்வாறு பேருந்தில் திருடிய நபரிடம் விசாரணை செய்தபோது, இவர்கள் பல குழுக்களாக உள்ளதாகவும், நெருக்கடி மிகுந்த பேருந்துகளில் குறிப்பாக காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் யாரும் அவர்களின் உடமைகள் மீது அதிக அளவு கவனம் செலுத்த மாட்டார்கள். எனவே அதை பயன்படுத்திக் கொள்வதாகவும், மேலும் நெரிசலின் போது குழந்தைகளின் கை மற்றும் கழுத்தில் உள்ள தங்கச் சங்கலியை திருடுவது சுலபம் எனவும் கூறினார்.

மேலும் பேருந்து இருக்கையில் அமர்ந்து ஒருவரின் தோல்பை மற்றும் கைப்பையில் உள்ள நூலை பிரித்து திருடுவதாகவும், திருட்டு போனது கூட அறியாமல் அவர்களின் பையில் உள்ள தையல் பிரிந்ததால் தான் பணம் மற்றும் பொருள் தொலைந்து விட்டதாக அவர்கள் கருதுவார்கள் எனவும் அவர்கள் கூறினர்.

தென்காசி மாவட்ட காவல் துறையில் அறிவிப்பு: பேருந்து பயணத்தின் போது அலட்சியம் வேண்டாம், உங்களின் குழந்தைகள் மற்றும் உடமைகளை பாதுகாத்துக் கொள்வது உங்களின் கடமையாகும். பேருந்து பயணிக்கும் போது அடிக்கடி உங்கள் உடமைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் நடத்துனரிடமோ அல்லது காவல்துறையினரிடம் தயங்காமல் தகவல் தெரிவிக்கவும்.

இந்த திருட்டு கும்பலை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆண் மற்றும் பெண் காவலர்கள் பேருந்தில் சக பயணி போல் பயணித்து திருட்டு கும்பலை கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News