தென்காசி மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை : தடுப்பணை மதகுகளை வீகே.புதூர் வட்டாட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக தாயார் தோப்பு தடுப்பணை மதகுகளை வீகேபுதூர் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-25 10:53 GMT

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருவதால் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பெய்து தொடர்மழை காரணமாக, அடவிநயினார் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. விரைவில் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடவிநயினார்  அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர், வீ.கே. புதூர் அருகே தாயார் தோப்பு பகுதியில் உள்ள அனுமன் நதி மற்றும் சிற்றாறு சேருமிடத்தில் உள்ள   தடுப்பணைக்கு வந்து சேருகிறது. இங்கிருந்து தண்ணீரை சீராக வெளியேற்றக்கூடிய  அணை மதகுகளின் உறுதித்தன்மையை, வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், மண்டல துணை வட்டாட்சியர் சிவனு பெருமாள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

இந்த சிற்றாறு மற்றும் வீராணம் கண்மாய் தடுப்பணையில் உள்ள மதகுகளை போதுமான அளவு உயர்த்தி வைப்பது குறித்தும், அதிக அளவில் நீர் வரும்போது சிற்றாறு வழியாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் கால்வாய் வரை செல்வதற்கு உரிய முன்னேற்பாடுகள் செய்வது  குறித்தும், வெள்ளத்தால் கால்வாய், தடுப்பணையில் கரைகள் சேதமடைந்து மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News