சிவகங்கை அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அரிவாளால் வெட்ட முயற்சி

சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அரிவாளால் வெட்ட முயன்ற 3 பேரை ஊர்மக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

Update: 2021-07-31 03:03 GMT

சிவகங்கை காவல் நிலையம்

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கோமாளிபட்டி கிராமத்தில் சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கோமதி. இவரது கணவர் மணிமுத்து. இவர்கள் கோமாளிபட்டியில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் கணவர் மணிமுத்துவை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். அப்போது  ஆட்கள் கூடியதால் தப்பியோடியுள்ளனர். அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற கிராமத்து இளைஞர்களை அரிவாளால் வெட்டியதில் கருப்பசாமி, கருப்பையா, வாசுதேவன் ஆகியோர் காயமடைந்தனர். 

இருப்பினும்,  தப்ப முயன்ற மூன்று பேர்களையும் பிடித்து சிவகங்கை போலீஸிடம் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் , ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் கணவர் மணிமுத்துவை அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞர்கள், கீழப்பூவந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில், அன்பரசன், ராஜா என்பதும், இவர்கள் முன்று பேரும் தங்கள் ஊருக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தராததால் ஆத்திரமடைந்து தாக்க முயன்றதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News