வாலாஜா பாலாறு அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வாலாஜா அருகேயுள்ள பாலாறு அணைக்கட்டுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

Update: 2021-10-18 09:04 GMT

தண்ணீரில் மலர் தூவி வரவேற்கும் அமைச்சர் காந்தி

வாலாஜா பாலாறு அணைக்கட்டில் 6 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் சுமார் 2,500 கன அடி தண்ணீர் காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி, கோவிந்தவாடி ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. சுமார் 3 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் பாலாற்றில் திறந்துவிடப்படுகிறது. மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியில் 28.8 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 369 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் 188 ஏரிகளும் உள்ளன. இதில் 82 ஏரிகள் 100 சதவீதமும், 28 ஏரிகள் 75 சதவீதமும், 43 ஏரிகள் 50 சதவீதமும், 72 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.

ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணைக்கட்டை அமைச்சர் காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு நீரில் மலர் தூவி வரவேற்றனர். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் ஆனந்தன், பொதுப்பணித் துறை அதிகாரி சிவசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News