வாலாஜா அருகே சேதமடைந்து 9 மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலை

கடந்த 9 மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ள வாலாஜா அருகே உள்ள அனந்தலை ஏரிக்கரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2021-06-27 04:21 GMT

வாலாஜா அருகே சேதமடைந்து 9 மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலை

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையிலிருந்து அனந்தலை வழியாக வள்ளுவம்பாக்கம், பொன்னப்பந்தாங்கல், பாணாவரம் செல்லவும் மற்றும் பணப்பாக்கம் வழியாக அரக்கோணம் செல்லும் முக்கிய சாலையாக இருந்து வரும் அனந்தலை சாலையை சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மாநில நெடுஞ்சாலைத் துறையினரின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த சாலை, கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மழையால் அனந்தலை ஏரிக்கரை நீர்க்கசிவு காரணமாக சாலைத்தடுப்புகளை உடைத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் நல்வாய்ப்பாக விபத்துகள் நடக்கவில்லை. உடனே தகவறிந்த வந்த வாலாஜாப்பேட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை சேதமடைந்த சரிவடைந்த பகுதிகளை பார்வையிட்டு, வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு எச்சரிக்கைகளை வைத்து விட்டு சென்றனர்.

தற்போது வரை சேதமடைந்த சாலை சீரமைக்கப்படாமலேயே காணப்படுகிறது. மேலும் அனந்தலை மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தும் சாலை சீரமைக்கப்படாமலே உள்ளது.

தற்போது பருவமழை தொடங்கியுள்ள சூழலில் மேலும் சாலை சரிவடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள அச்சாலை வழியாகச் செல்பவர்கள் வேறு வழியின்றி பெரிதும் அச்சமடைந்தநிலையில் சென்று வருகின்றனர.

எனவே போர்க்கால நடவடிக்கையாக விரைந்து எதிர் வரும் மழைக்கு முன்பாக சாலையில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து மேற்கொண்டு சரிவுகள் ஏற்படாமல் தடுப்புகளை பலப்படுத்தி சீரமைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News