பெரம்பலூரில் மானியத்துடன் ஆடு வளர்க்கும் திட்டம்: கலெக்டர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்துடன் ஆடு வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா கூறினார்.

Update: 2021-12-02 02:58 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு 100% மானியத்தில் வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கப்படவுள்ளது. ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வீதம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழை பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக இருக்க வேண்டும். (குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவருக்கும் சொந்தமாக நிலம் இருக்கக்கூடாது) கிராம பஞ்சாயத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

பயனாளி 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். தற்சமயம் மாடு மற்றும் ஆடு / செம்மறி ஆடுகளை வைத்திருக்கக்கூடாது. மத்திய / மாநில அரசு அல்லது எந்தவொரு அமைப்பு / கூட்டுறவு அல்லது எந்த உள்ளுர் அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கக் கூடாது.

(அவர்களது மனைவி அல்லது தந்தை / தாய் / பெற்றோர் / மகள் / மருமகன் / மருமகள் அவ்வாறு இருக்கக்கூடாது). பயனாளிகள் முதல் முறை ஆடு உரிமையாளர்கள் என்பதை உறுதிப்படுத்திட, இலவச கறவை மாடுகள், இலவச ஆடு / செம்மறியாடு வழங்கும் திட்டங்கள் மற்றும் புழக்கடை ஆடு மேம்பாடு திட்டங்களில் இருந்து பயனடைந்திருக்கக்கூடாது.

மேற்காணும் தகுதி உடையவர்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலர் கையொப்பம் பெற்று சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் 20.12.2021-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News