கடத்தப்பட்ட பெரம்பலூர் அரசு பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டாரா?

கடத்தப்பட்ட பெரம்பலூர் அரசு பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.;

Update: 2023-12-06 15:38 GMT

ஆசிரியை தீபா மற்றும் ஆசிரியர் வெங்கடேசன்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது.

அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் போலீசார் விரைந்து சென்றுகாரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம்.கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணைநடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போதுஅங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News