பெரம்பலூரில் 6 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் பாராட்டு

பெரம்பலூரில் 6 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் சிவசங்கர் பாராட்டுகளை தெரிவித்தார்.

Update: 2021-09-05 17:32 GMT

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ப.ஶ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், ஆசிரியரை தெய்வத்திற்கு இணையாக அல்ல மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவராக போற்றிவருவது நமது தமிழ்ச்சமூகம். ஒரு நாட்டின் எதிர்காலம், வளர்ச்சியை தீர்மானிப்பவர்கள் இந்த நாட்டின் வகுப்பறையில்தான் உருவாக்கப்படுகிறார்கள்.

மாணவனுக்குத் தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் கற்றுக்கொடுத்து, நல்லவராக, பண்புள்ளவராக, ஒழுக்கம் உள்ளவராக, நல்ல சிந்தனை உடையவராக, கண்ணியம் உள்ளவராக, சிறந்தவராக, அறிஞராக, மேதையாக, தலைசிறந்தவர்களாக உயர்த்தும் உன்னத பணியே ஆசிரியர் பணி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

வாழ்க்கை எனும் பாடத்தைக் கற்றுத் தந்து மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி ஒவ்வொரு மாணவர்களையும் சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள்தான். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு அரசுப்பள்ளிகள் - ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகின்றார்கள்.

ஆசிரியர் பணியினை அற்பணிப்பு உணர்வோடு செய்துவரும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில், ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத்தலைவராக உயர்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்களது பெயரில் விருதினையும் ஒவ்வொரு ஆண்டும் விருதினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர்களை வாழ்த்துவதற்கு மிகவும் பெருமைப்படுகின்றேன். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் மறக்க இயலாத ஒருவர் ஆசிரியரே. நான் எனது வாழ்க்கையில் இன்றளவும் எனது ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி வரை அனைத்து ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்து, அவர்களை எப்போது எங்கு சந்தித்தாலும், நான் என்ன பதவியில் இருந்தாலும் அவர்களிடம் ஒரு மாணவனாகவே நடந்துகொள்கின்றேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசுப்பள்ளியில் படித்தவன் நான் என்பதை என்றும் பெருமையாக கருதுகின்றேன். எனது ஆசிரியர்களான பாலகிருஷ்ணன் ஆசிரியர், கருப்புதுண்டு ஆசிரியர், தெய்வசிகாமணி ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியப்பெருந்தகைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நமது பெரம்பலூர் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முன்னேறுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் கலந்தாலோசித்து தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து ஆசிரியப்பெருமக்களும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டாதாரி ஆசிரியர் ஆ.இராமர், எழுமூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செ.ஜெயா, து.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பூ.புகழேந்தி, தெரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ரெ.திருஞானசம்பந்தம், நேரு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அபிராமசுந்தரி, அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.உமாவதி ஆகிய 6 ஆசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் தலா ரூ.10,000 ஊக்கத்தொகையினையும் அமைச்சர்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜே.அ.குழந்தைராஜன் (வேப்பூர்), அ.மாரிமீனாள்(பெரம்பலூர்) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News