கல்லூரி மாணவர்களுக்கு குடும்ப நல சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின்படி கல்லூரி மாணவர்களுக்கு இந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது

Update: 2021-09-15 01:47 GMT

சட்ட விழிப்புணர்வு  பேசிய பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சு. லதா

பெரம்பலூரில் கல்லூரி மாணவர்களுக்கு குடும்ப நல சட்டங்கள் தொடர்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சு. லதா தலைமை வகித்து பேசியதாவது:  குடும்ப நல சட்டங்கள் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்வுடனும் வாழ்வதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது, குழந்தை கருவில் இருக்கும் போதே சொத்தை பெறுவதில் அதற்கான சட்ட உரிமையை பெறுகிறது. எனவே குடும்பம் என்பது அனைவரும் மனம் ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி அவசியமோ, அதே போல சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் மறுக்காமல் அனைவரும் பெறவும், வழங்கவும் வழிவகை உள்ளது.

கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் நாளை மாணவ சமுதாயத்திற்கு கல்வி கற்பிக்கும் போது, சட்டத்தின் உரிமைகளை எடுத்துரைப்பது உங்களின் கடமை என்றும் சட்டம் இயற்றும் பொழுதே அதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும், எனவே குடும்ப நலம் சார்ந்த சட்டங்கள் மட்டுமல்லாது, அனைத்து சட்டங்களையும் அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை, பாதுகாப்பு அலுவலர் முத்துச்செல்வி  பேசுகையில், குடும்ப வன்முறைகள் குறித்தும், பெண்களின் பாதுகாப்பிற்கான அம்சங்களையும், சமூக நலத்துறை மூலம் குழந்தைத் திருமணங்கள் போன்ற சட்ட விதிகளுக்கெதிரான குற்றங்களை களையவும் செயல்படுகிறது என குறிப்பிட்டார்.

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர் கீதா பேசுகையில்,  ஒருங்கிணைந்த சேவை மையம் என்பது பெண்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெறாமலும், வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களுக்கான சட்ட பாதுகாப்பு, சட்ட உதவி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமும் மற்றும் தங்கும் வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களிலிருந்து மீட்டிட 181 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முனைவர். செல்வன்  வரவேற்றார்.  உதவி பேராசியர் மாயவேல் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை,  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு  இளநிலை நிர்வாக உதவியாளர் சக்கரபாணி ,பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தினர்.

Tags:    

Similar News