24 மணி நேரம் தொடர் மின்சாரம் வழங்க முடியாது- தொழிற்சங்க தலைவர் பேட்டி

24 மணி நேரம் தொடர் மின்சாரம் வழங்க முடியாது என பெரம்பலூரில் பேட்டி அளித்த தொழிற்சங்க தலைவர் கூறினார்.

Update: 2021-10-23 15:56 GMT

பெரம்பலூர் கட்டிட திறப்பு விழாவில் மின்வாரிய தொழிற்சங்க  மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் இராஜேந்திரன் பேசினார்.

பெரம்பலூர் 4 ரோடு மின் மேற்பார்வை பொறியாளர், அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி  இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் இராஜேந்திரன் கூறியதாவது:-

தமிழக அரசு மின் ஊழியர்களுக்கு 25 சதவீத போனஸ், கருணைத் தொகை வழங்க வேண்டும், இதற்கான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வருகிற அக்டோபர் 25-ஆம் தேதி மாநில அளவில் அனைத்து மின்வாரிய அலுவலகம் முன்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நமது நாட்டின் நிலக்கரி உற்பத்தி 22 ஆண்டுகளுக்கு தேவையான இருப்பு உள்ளது.  இதனை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இதனால் மின் உற்பத்தி செலவு அதிகரிக்கும், நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும் அதனை நேரடியாக பயன்படுத்த முடியாது, நமது நாட்டு நிலக்கரி உடன் சேர்ந்து தான் பயன்படுத்த முடியும் அதற்கான தொழில் அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது சாத்தியக்கூறு அல்ல மேலும் தடையில்லா, மின்சாரத்தையும், நேர சுழற்சி முறையில் மின்சாரம் வழங்க தரமான தளவாட பொருட்கள் , போதிய பணியாளர்கள் போன்ற உள்கட்டமைபு வசதிகளை சரி செய்தால் மட்டுமே பகுதி நேர சுழற்சி முறையில் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும். இருந்த போதிலும் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்தாலும் இருபத்தி நான்கு மணி நேர தொடர் மின் இணைப்பு என்பது சாத்தியக்கூறுகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி கோட்ட செயலாளர் அகஸ்டின்  உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News