ஒரே பைக்கில் பல பேர் சவாரி: நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாருக்கு வலியுறுத்தல்

ஒரே பைக்கில் பல பேர் பயணம் செய்து ஆபத்தை விலைக்கு வாங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Update: 2021-07-14 15:45 GMT

பெரம்பலூர் சாலையில் ஆபத்தை உணராமல் ஒரே பைக்கில் 5 இளைஞர்கள் பயணம் செய்யும் காட்சி 

தமிழகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இருசக்கர வாகனங்களின் பெருக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் முதல் சென்னை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட போதிலும், விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இவற்றுக்கு காரணம் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் செயல்படுவதேயாகும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதில், திருப்பங்களில் சிக்னல் போடாமல் திரும்புவது, ஒரே பைக்கில் 3, 4 பேர் பயணிப்பது போன்றவைகளால் அன்றாடம் விபத்துகள் நிகழ்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக பெரம்பலூரில் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன.

பெரம்பலூரில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் உள்ளன. டவுனுக்கு சென்று வர ஒரே சாலை மட்டுமே உள்ளது. இதனால் பிகவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். குறிப்பாக பழையபேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த பிகவர்ஸ் நேரத்திலும் இருசக்கர வாகனங்களில் இளசுகள் பட்டாளம் ஒரே பைக்கில் 3, 4 பேர் செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இவ்வாறு செல்வதால் அவர்கள், விபத்தில் சிக்குவதோடு முன்னால் செல்பவர்களையும் தேவையற்ற பீதிக்குள்ளாக்குகின்றனர்.

இதேபோல் கணவன், மனைவி, இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் உடமைகள் என அனைத்தையும் ஒரே பைக்கில் ஏற்றிக் கொண்டு தட்டுத்தடுமாறி செல்கின்றனர். படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை இந்த தவறை நாள்தோறும் செய்கின்றனர். இவை தவிர தற்போது ரேஸ் பைக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இவர்கள் பைக்குகளின் சைலன்சர்களில் அதிகஒலியை எழுப்பிக் கொண்டு வேண்டுமென்றே செல்வதால் முன்னால் மற்றும் பின்னால் செல்பவர்கள், சாலைகளில் நடந்து செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நபர்களை போக்குவரத்து போலீசார் கண்காணிப்பதோடு, ஒரே பைக்கில் 3, 4 பேர் செல்வதையும் பிடித்து அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முன்பு போக்குவரத்து போலீசார் நின்று இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தாகும்.



Tags:    

Similar News