பெரம்பலூர் மாவட்டத்தில் 327 நபர்களுக்கு ரூ.12.54 கோடி கடன் உதவிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முகாமில் 327 பேருக்கு ரூ.12.54 கோடி கடன் உதவிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வழங்கினார்.

Update: 2021-10-21 15:32 GMT

 பெரம்பலூரில் நடந்த முகாமில் பயனாளி ஒருவருக்கு கடன் தொகைக்கான  ஆணையை கலெக்டர்  ஸ்ரீவெங்கட பிரியா வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கடன் வழங்கும் முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தொடங்கி  வைத்தபோது கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வங்கி கிளைகளும் விவசாயம் சார்ந்த கடன்களான பயிர்கடன், கறவைமாடு கடன்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்கிடவும், அரசின் திட்டங்களையும் சலுகைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில், கடன் உதவிகளை வங்கிகள் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வங்கிகள் இணைந்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளது .

அரசின் சார்பாக புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்த விவரங்களும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் தொழில் கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்தும், கடன் உதவிகளை அதிக அளவில் வழங்குவது குறித்தும், கடன் பெறும் விபரங்கள் குறித்தும் அனைவரும் தெரிந்து பயன்பெற வேண்டும்.

இன்றைய தினம் பல்வேறு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் வழங்க உள்ளது, கடன் பெறும் அனைவரும் தொழில்களைத் தொடங்கி சிறப்பான வளர்ச்சியை பெறவேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிகள் அதிக அளவில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வங்கியாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கடன் திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது, கடன் பெற்றுள்ள நீங்கள் தன்னம்பிக்கையுடன் தொழில்களைத் தொடங்கி சிறப்பாக நடத்திட வேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை வங்கி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் வழங்கும். இந்த முகாம் நடத்துவது இது துவக்கமாக இருக்கும் தொடர்ந்து இதுபோன்று முகாம்கள் நடத்தப்படும்/

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் மூலமாக பல்வேறு கடன் உதவிகளை பல்வேறு மக்களுக்காக மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வங்கி கிளைகளும் கலந்துகொண்டு 327 நபர்களுக்கு ரூ.12.54 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் வங்கி தொடர்பான கடன் திட்டங்கள் பற்றியும் பணம் இல்லா பரிவர்த்தனை பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு கொடுத்திருந்த ரா.ரமேஷ் அவர்களுக்கு மாவட்ட தொழில்மையம் மூலம் செயல்படுத்தப்படும் பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க ரூ.2.09 இலட்சம் மதிப்பிலான கடன் ஒப்புதல் ஆணையை மாவட்ட ஆட்சியர் பயனாளிக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் சங்கீதா, மண்டல மேலாளர் (தமிழ்நாடு கிராம வங்கி) மீரா ராஜன், உதவி பொது மேலாளர் (கனரா வங்கி, திருச்சி மண்டல அலுவலகம்) கலாக்கர், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் (பெரம்பலூர்) நவீன்குமார், முன்னோடி வங்கி மேலாளர் அருள், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) இராஜமோகன், பொது மேலாளர்(மாவட்ட தொழில் மையம்) செந்தில் குமார் மற்றும் வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News