கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1049 வழக்குகளுக்கு தீர்வு

கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1049 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

Update: 2024-06-09 07:19 GMT

மக்கள் நீதிமன்றத்தில் ஒரு வழக்காடிக்கு நீதிபதி வழக்கு முடித்து வைத்ததற்கான ஆணையை வழங்கினார்.

நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் பவ ஆண்டுகளாக நிலுவையில் உள்ள  சிறு மற்றும் சிவில் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவாக முடிப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றங்களை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

இதன்படியும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும், அரவக்குறிச்சியில் ஒரு அமர்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமர்வும் என மொத்தம் 7 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம்  நடைபெற்றது. இந்த அமர்வுகளில் 1226 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1049 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.10,59,65,880/-தொகை வழங்கப்பட்டது.

கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் இதனை துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள், பார் அசோசியேசன் நிர்வாகிகள், அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் (பொறுப்பு) மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சொர்ணகுமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News