காஞ்சிபுரம் அருகே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

காஞ்சிபுரம் அருகே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

Update: 2024-04-02 12:04 GMT

தனி வாக்கு சாவடி மையம் அமைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு என அறிவிப்பு பலகை வைத்துள்ள லப்பை கண்டிகை பகுதி மக்கள்

காஞ்சிபுரம் அருகே 4 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று வாக்களிக்க இயலாத நிலையில் தனி வாக்குச்சாவடி கேட்டு கோரிக்கை மனு அளித்தும்,  செவி சாய்க்காதால் தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக லப்பைகண்டிகை கிராம மக்கள் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட லப்பைகண்டிகை பகுதியில் 350 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் இவர்கள் பல்வேறு தேர்தலில் நான்கு கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று வளத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி பள்ளியில் வாக்கு செலுத்தி வந்துள்ளனர்.

தூரம் அதிகமாக உள்ள நிலையில் வாக்குப்பதிவு செலுத்த இப்பகுதி மக்கள் பெரிதும் ஆர்வம் காட்ட விரும்பவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் வாக்கு சாவடி மையம் அமைக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில் அதனை தற்போது வரை செயல்படுத்தவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து இது குறித்து மனு அளித்த போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் புதிய கால அவகாசம் இல்லாததால் இந்த முறை மீண்டும் வளத்து ஊராட்சியிலே வாக்கு பதிவு செய்யும் நிலை ஏற்பட்டதை அறிந்து, தங்கள் கோரிக்கையை தேர்தல் நிர்வாகம் ஏற்காததால் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து அது குறித்த பதாகை அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

அதனையும் சில மர்ம நபர்கள் நேற்று எடுத்து சென்று விட்டதாகவும் , அப்பகுதியில் சென்று வாக்களிக்க முடியாத நிலை பல முதியவர்களுக்கு உள்ளதாகவும், மதரீதியாக சில பேரை கடந்த தேர்தலின் போது சந்தித்ததை இனி வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என்பதால் தனி வாக்கு சாவடி மையம் கேட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News