வெகு சிறப்பாக நடைபெற்ற வரதராஜப் பெருமாள் தீர்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வாக அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2023-06-08 12:45 GMT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் தீர்த்தவாரி உற்சவம் திருக்குளத்தில் நடைபெற்ற போது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி விழாவின் நிறைவாக தீர்த்தவாரி உற்சவம்  நடைபெற்றது.

அத்திவரதர் புகழ் பெற்றதும்,  பழமையும் மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயர் சமேத தேவராஜ சுவாமி திருக்கோயில். இக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த ஜூன் மாதம் 31 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பல்வேறு வாகனங்களில் மாநகர் வீதிகளில் வலம் வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வுகளான கருட சேவை ஜூன் 2 ஆம் தேதியும், தேரோட்டம் ஜூன் 6 ஆம் தேதியும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக 9ம் நாள் விழா நிறைவாகவும் திருக்கோயில் வளாகத்திற்குள் அத்திவரதர் எழுந்தருளச் செய்துள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

தீர்த்தவாரி உற்சவ நாளன்று காலையில் பெருமாள் பல்லக்கில் போர்வைகள் சூடியவாறு வீதியுலா வந்தார். சங்கரமடம் அருகில் போர்வைகள் களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலைகள் அணிந்து பல்லக்கில் சந்நிதிக்கு எழுந்தருளினார்.

இதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் மட்டையடி மகோற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளினார். பெருமாளைத் தொடர்ந்து திருக்கோயில் திருமலையிலிருந்து பிரணதாத்தி ஹர வரதர் அனந்தசரஸ் திருக்குளத்துக்கு எழுந்தருளியதும் கோயில் பட்டாச்சாரியார்கள் உட்பட பக்தர்கள் பலரும் புனித நீராடினார்கள்.

தீர்த்தவாரி உற்சவத்தில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் ரா.வான்மதி,உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி,கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன்,குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தீர்த்தவாரி உற்சவத்துக்குப் பிறகு பெருமாள் அலங்கார மண்டபத்துக்கும், பிராண தாத்தி ஹரவதர் திருமலைக்கும் எழுந்தருளினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .எம்.சுதாகர் தலைமையிலும், துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் மேற்பார்வையிலும் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் திருக்குளத்தை சுற்றிலும் பைபர் படகுகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News