குறைந்த விலை தக்காளி விற்பனை துவக்கி வைத்த எம்எல்ஏவுக்கு தக்காளி பரிசு

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நியாய விலை கடைகளில் தற்காலிக குறைந்த விலையில் விற்பனை செய்யும் நிகழ்வினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-05 10:00 GMT

 நியாய விலை கடையில் கூட்டுறவு துறை சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை  நிகழ்வினை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,  உடன் மாநகராட்சி மேயர் 

தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்று 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது தக்காளி விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாக தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு வித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளியை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாயவிலைக் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட  செட்டி தெரு இரண்டாவது நியாய விலை கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசனுக்கு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தக்காளிகளை கூடையில் வைத்து பரிசாக அளித்தனர். தற்போது இருப்பதிலேயே விலை உயர்ந்த பொருள் என கூறி எம் எல் ஏ எழிலரசன் தக்காளி கொடு என பெற்றுக்கொண்டு உதவியாளரிடம் வழங்கி காரில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.

எம்எல்ஏ வின் இச் செயல் அங்கிருந்த மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி வழங்கும் மலிவு விலை தக்காளி விற்பனை திட்டத்தை எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் , மண்டல குழு தலைவர் சந்துரு, மாநகராட்சி பணி குழு தலைவர் சுரேஷ்,   உள்ளாட்சி பிரதிநிதிகளும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News