ஏகனாபுரம் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: ஆட்சியர் கலைச்செல்வி

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2024-04-10 12:00 GMT

ஆட்சியர் கலைச்செல்வி 

தேர்தலை புறக்கணிக்கும் ஏகனாபுரம் கிராம மக்களிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே நடைபெற்ற நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பணி அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மூலம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை புகார்களாக தெரிவிக்க தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சி - விஜில் செயலி குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட எஸ்பி சண்முகம் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில், தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட செயலில் தேர்தல் முறைகேடுகளை உரிய ஆவணத்துடன் சமர்ப்பிக்கும் முறையை பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பெயர் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் முழுமை பெறும் எனவும் தெரிவித்தார்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மற்றும் முன்பு பார்வையாளர் மற்றும் துணை ராணுவத்தினர் பணி அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

மேலும் பதட்டமான வாக்குச்சாவடியாக உருவாக யார் காரணங்கள் என கண்டறிப்பட்டு அவர்களிடம் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் வகையில் செயல்படுவேன் என இதுவரை 69 நபர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், பயிற்சி ஆட்சியர் சங்கீதா, தேர்தல் வட்டாட்சியர் தாண்டவ மூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News