அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

காஞ்சிபுரம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் மனு அளித்து உள்ளனர்.

Update: 2023-02-02 07:45 GMT

காஞ்சிபுரம்  அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சுமார் 2100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. தற்போது அப்பகுதியில் வீடற்ற நபர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படுகிறது.

நீர்நிலைகளை ஆக்கிரமித்த நபர்களை அகற்றி அவர்களுக்கு அப்பகுதியில் மத்திய மாநில அரசின் மானிய தொகையுடன் ரூ. 1.25 லட்சம் செலுத்தி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடன் இருந்தார்.

அப்போது அப்பகுதியில் குடியேறிய குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் , பால் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி கடைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஆறு கிலோ மீட்டர் தூரம் பிள்ளையார் பாளையம் செல்லும் நிலை ஏற்படுவதை தவிர்க்க குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை திறக்க வேண்டும்.

குடிநீர் சிறு தொட்டி அமைக்க வேண்டும் சிறப்பு முகாம் ஏற்படுத்தி ரேஷன் கார்டு வாக்காளர்,  அடையாள அட்டை மற்றும் ஆதார் முகவரியை மாற்றம் செய்து தர வேண்டும்

வரும் கல்வி ஆண்டு முதல் இங்குள்ள குழந்தைகள் படிக்க நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்க வேண்டும். உயர்நிலை மேல்நிலை கல்வி கற்க இங்கிருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்லும் வகையில் கூடுதல் அரசு பேருந்துகள் வழித்தடத்தில் இயக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து வாரம் இரு நாள் மருத்துவர்கள் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

குடியிருப்பு வளாகத்தின் அருகிலேயே அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துவதால் பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை நிலைமை உள்ளதால் அதனை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்.

இப்பகுதியில் உள்ள குப்பைகளை இரண்டு நாளுக்கு ஒரு முறை தூய்மை பணியாளர்களைக் கொண்டு அகற்ற வேண்டும்.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள நபர்கள் இறந்தால் அவர்களின் இறுதி சடங்கு மேற்கொள்ள இப்பகுதியில் சமத்துவ இடுகாடு அமைக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட  15க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தரும்படி குடியிருப்பு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News