காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை உடனடியாக மீட்கப்பட்டது.

Update: 2022-03-11 15:15 GMT

அரசு மருத்துவமனையில் கடந்தபட்ட பச்சிளம் குழந்தை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, மேலபழந்தை கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி சுஜாதா கடந்த சில தினங்களுக்கு முன்பு மகப்பேறுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. வெளிமாவட்ட நபர் என்பதால் சுஜாதாவுடன் கணவரை தவிர உதவியாளர் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் 12 மணியளவில் குழந்தையை படுக்கையில் வைத்துவிட்டு கழிவறைக்கு சென்ற சுஜாதா மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது குழந்தை மாயமாகியுள்ளது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்குள்ள செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குழந்தை மாயமானது குறித்து அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அரசு மருத்துவமனை முன்பு இருந்த ஆட்டோ நிறுத்தத்தில் விசாரித்தபோது சில நிமிடங்களுக்கு முன்புதான் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் கைக்குழந்தையுடன் ஒருவரை இறங்கிவிட்டதாக ஆட்டோ டிரைவர் கூறியதின்பேரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் ஜனார்த்தனன், ராஜ் மற்றும் சுரேஷ் உடனடியாக ஆட்டோவில் சென்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பெண் மற்றும் ஆண் ஒருவரிடம் இருந்து கைக்குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து வந்து இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்துவிட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து மூன்று நாட்கள் ஆகியுள்ளதால் இது குறித்த காட்சிகள் கிடைக்கவில்லை என்பதும், துரிதமாக செயல்பட்ட ஊழியர்களால் குழந்தை மீட்கப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News