10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை

பல முறை மனு அளித்தும் , மாவட்ட நிர்வாகம், காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் -லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.

Update: 2022-05-20 08:37 GMT

விபத்துக்களை தவிர்க்க மணல் குவாரிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழக அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் யுவராஜ் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

இம்மனுவில் , தமிழகத்தில் கனிம வளத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்குவாரிகளில் மணல் சரிவு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதனால் உயிர் சேதங்கள் ஏற்படுகிறது. கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் , கல்குவாரி ஒன்றில் மணல் சரிவு ஏற்பட்டு இரு நபர்கள் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 176 கிரஷர்கள் செயல்பட்டு வரும்  நிலையில் 25 நிறுவனங்கள் மட்டுமே மாவட்ட அரசிடம் முறையான அனுமதி பெற்று எம்.சாண்ட் அரவை மேற்கொள்கின்றனர்.அனுமதி இல்லாமல் இயங்கும் கிரஷர் தொழிற்சாலையில் இருந்து தரமற்ற எம் சாண்ட் மூலம் கட்டபடுவதால் கட்டுமானத்தில் தரம் குறையும் வாய்ப்பு உள்ளது.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் கல் குவாரிகள் மற்றும் எம் சாண்ட் கிரஷர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு கனிம விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , கல் குவாரிகளை லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் அதற்கான பாதுகாப்பும் ஏற்பாடு செய்திட வேண்டுமென இம்மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பல முறை இதுகுறித்து மனு அளித்தும் , மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புதிய அரசாவது இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டத்தினை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News