காஞ்சிபுரம் பகுதியில் காடாக மாறிவரும் பாலாறு; விவசாயிகள் வேதனை

காஞ்சிபுரத்தில் பாயும் பாலாறு அடர்ந்த வனப் பகுதியாக மாறி வருவது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-20 04:30 GMT

குருவிமலை அருகே செல்லும் பாலாற்றின் பாதி காடாக மாறியுள்ள காட்சி. 

பாலாறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள மாமல்லபுரம் அடுத்த வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றால் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தடுப்பணைகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. பாலாறு பாயும் இப்பகுதிகள் அனைத்தும் ஒரு கிலோ மீட்டர் தூரம் அகலம் கொண்டதாகும்.

இந்த பாலாற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் இந்த மணல் குவாரியில் மணல் அள்ள அரசு தடை விதித்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலை பகுதியில் உள்ள பாலாறு தற்போது அடர்ந்த காடாக உருமாறி வருகிறது. இதில் பனை, தென்னை, சீமைக் கருவேலம் என அனைத்து வகையான மரங்களும் வேரூன்றி அடர்ந்த வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது.

ஒரு கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாலாற்றின் பாதி வரை அடர்ந்த வனப்பகுதி போல் உருமாறி வருவதால், வரும் வடகிழக்கு பருவ மழையின் போது நீர் வரத்து ஒரு பகுதியாக விலகி செல்லும். இதனால் ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் எனவும், மேலும் நீர் ஆதாரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள்  கவலை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இதனை உரிய முறையில் கையாண்டு பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் பலர் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

Tags:    

Similar News