இரவு நேர ஊரடங்கு: வெறிச்சோடியது காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காவலர்கள் கண்காணிப்பு இல்லாமலே நள்ளிரவு ஊரடங்கு அமலானது; இதனால் நகரம் வெறிச்சோடியது.

Update: 2022-01-07 00:00 GMT

இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட காஞ்சிபுரம் காந்தி சாலை. 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில்,  தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தமிழக அரசுத்துறை அதிகாரிகள்,  சுகாதாரத்துறை ஊழியர்கள், வல்லுனர்கள்  உள்ளிட்டோர் உடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, நேற்று இரவு 10 மணி முதல்,  புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி, இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 10 மணி முதலே சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பதினோரு மணிக்கு, முக்கிய சாலைகளான  காந்தி சாலை, பேருந்து நிலைய சாலை, மூங்கில் மண்டபம், மேட்டுதெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை என அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

வழக்கமாக காவல்துறை இரவு 10 மணிக்கு ரோந்து பணி துவங்கும் நிலையில், நேற்று எந்த ஒரு சந்திப்பிலும் காவல்துறை தடுப்புகள் அமைக்காமல் இருந்த நிலையில்,  பொதுமக்களே நள்ளிரவு ஊரடங்கை வரவேற்பது போல் சாலைகளில் பயணிப்பதை முற்றிலும் குறைத்து கொண்டனர்.

அரசு,  தனியார் பேருந்துகள், தொழிற்சாலை பேருந்துகள், கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மட்டுமே சென்று வந்தன. ஊரடங்கு காலங்களில் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறை வழக்கமான ரோந்து பணிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

Tags:    

Similar News