காஞ்சிபுரத்தில் தற்காலிக காய்கறி சந்தை துவக்க விழாவில் மேயர் பங்கேற்பு

புதிய காய்கறி சந்தை வளாகம் கட்டப்பட உள்ளதால் ஓரிக்கை பகுதியில் 210 கடைகள் கொண்ட தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு அதனை மேயர் மற்றும் துணை மேயர் திறந்து வைத்தனர்.

Update: 2022-10-30 05:45 GMT

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை மேயர் , துணைமேயர், மாமன்ற உறுப்பினர்கள், காய்கறி வியாபாரிகள் இணைந்து திறந்து வைத்தனர்.

கடந்த 1907 ம் ஆண்டு காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைக்கபட்டது ராஜாஜி காய்கறி சந்தை. கடந்த 115 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள தோட்டக்கலை விவசாயிகளிடமிருந்தும் நாள்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

தற்போது இயங்கி வரும் ராஜாஜி காய்கறி சந்தையில் சுமார் 200 கடைகளுக்கு மேல் செயல்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

நகரின் போக்குவரத்து நெரிசல் முக்கிய காரணமாக இந்த ராஜாஜி காய்கறி சந்தை விளங்குகிறது. மேலும் பழமையான இந்த காய்கறி சந்தையை தற்போது நவீன அடிப்படை வசதிகளை கொண்ட புதிய வணிக வளாகமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டது.

இதற்கான பல கட்ட முயற்சிகளை நகராட்சியாக இருக்கும்போது தொடங்கி, தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்ட கடந்த ஜூலை மாதம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், ஆணையர் கணேசன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்நிலையில் அங்குள்ள வியாபாரிகளுக்காக தற்காலிக காய்கறி சந்தையை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் அமைக்கும் பணியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநகராட்சி துவக்கியது.

இந்நிலையில் பழைய இடத்திலிருந்து புதிய தற்காலிக இடத்திற்கு மாற கால அவகாசம் கேட்டதின் பேரில் அதிகாரிகள் அவகாசம் அளித்தும், அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டினர்.

அடிக்கல் நாட்டப்பட்டும் பணிகள் துவங்கப்படவில்லை என்று தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையிலும், வடகிழக்கு பருவமழை துவங்கும் பணிகள் துவங்கலாம் என மாநகராட்சி திட்டமிட்ட நிலையில் இது போன்று காலதாமதத்தை தவிர்க்க உடனடியாக ஓரிக்கை தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியது.

இதனிடையே 80 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் கடைகள் அனைத்தும் வியாபாரிகள் ஒத்துழைப்புடன் பகிர்ந்து அளிக்கப்பட்டு இன்று காலை கணபதி பூஜை உடன் துவங்கி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் காலை 9 மணி அளவில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் , துணை மேயர் குமரகுருநாதன், மண்டல குழு தலைவர்கள்,  மாமன்ற உறுப்பினர்கள், ஆணையர் , வியாபாரிகள் என  பலர் கலந்து கொண்டு தற்காலிக காய்கறி சந்தை திறந்து வைத்தனர் .

இன்னும் ஒரிரு நாளில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள காய்கறி கடைகள் அனைத்தும் தற்காலிக காய்கறி சந்தைக்கு மாற்றப்படும் என வியாபாரிகளும் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என வியாபாரிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News