இரு மாவோயிஸ்டுகளுக்கு ஏப்ரல்4ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

தடைசெய்யப்பட்ட இயக்கத்தினை சேர்ந்த ரீனா ஜாய்ஸ்மேரி (42) மற்றும் மகாலிங்கம் (50) ஆகிய இருவரும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

Update: 2022-03-23 00:00 GMT

மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரீனா ஜாய்ஸ்மேரி (42) மற்றும் மகாலிங்கம் (50) ஆகிய இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தங்கியிருந்த போது,  கடந்த 21.7.2016 ஆம் தேதி கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் மாவோயிஸ்ட் முக்கிய உறுப்பினராக இருந்ததுடன்,  அதில் உறுப்பினர்களை சேர்க்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் செய்துள்ளனர்.

அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இருவரையும், காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர் .ரீனா ஜாய்ஸ்மேரி மீது 3 வழக்குகளும், மகாலிங்கத்தின் மீது 10 வழக்குகளும் நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவரையும் கியூ பிரிவு போலீஸார் காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

இவர்கள் இருவரையும் விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன், வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு,  காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ரீனா ஜாய்ஸ்மேரி வேலூரில் உள்ள பெண்கள் மத்திய சிறைச்சாலையிலும், மகாலிங்கம் மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்படுவதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News