காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழாவிற்கு அனுமதி

Nayaru Temple-காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இந்த ஆண்டு வழக்கம் போல் கடை ஞாயிறு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-18 13:23 GMT

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கடை ஞாயிறு மண்டை விளக்கு பூஜையில் நேர்த்திக்கடன் செலுத்தும் குடும்பத்தினர் ( பைல் படம்).

Nayaru Temple-கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்திபெற்ற திருக்கோயில்கள் நோய் தீர்க்கும் திருத்தலங்களாக விளங்கி வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் தங்களது தலை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீர  மாவினால் அகல் விளக்கு தயார் செய்து அதில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்..

கடந்த இரண்டுஆண்டுகளாக  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து செயல்படுத்தியது. கடந்தாண்டு ஆண்டு பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றி அரசு வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து அறிவிப்பு பலகைகள் கோயில் முழுவதும் வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 7 மணி முதலே சிறப்பு பூஜைகளுடன் கடை ஞாயிறு  விழா துவங்கும்.ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து அரிசி மாவினால் விளக்குகள் தயார் செய்து விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே அர்ச்சனைகள் மேற்கொண்டு அதன் பின் தீபம் ஏற்றி தலையில் வைத்து  கோயில் பிரகாரங்களில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி நோய் தீர்க்க வேண்டுதலுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை வழிபாடு மேற்கொள்வர்.

இந்நிலையில் தற்போது கோயில் திருப்பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் கடை ஞாயிறு விழாக்கள் நடைபெறுமா என சந்தேகம் அடைந்த நிலையில் இந்தாண்டு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வழக்கம்போல் கடை ஞாயிறு விழா நடைபெறும் என கோயில் செயல் அலுவலர் ப.பூவழகி தெரிவித்துள்ளார்.

அதன்படி நவம்பர் மாதம் 20 மற்றும் 27 தேதிகளிலும், டிசம்பர் மாதம் 4 , 11 மற்றும் 15 தேதிகளில் கடை ஞாயிறு விழா நடைபெறும் எனவும், அதனைத் தொடர்ந்து 2023 ஜனவரி 6ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட நாட்களில் இத்திரு கோயில்களில் எவ்வித திருக்கல்யாண நிகழ்வுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கடை ஞாயிறு விழாக்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்த காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வருவதால் அதனை சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் அனைவரும் பயனடைவர் என்பதும், ஆண்டுதோறும்  கார்த்திகை மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படும் ஐயப்ப பக்தர்களும் அதிக அளவில் இக்கோவிலில் வந்து கடை ஞாயிறு விழாவில் தரிசனம் செய்வர்.

இந்தக் கடை ஞாயிறு விழாவையொட்டி காவல்துறை அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளும்,  திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்கள் பக்தர்களுக்கு தேவையான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும் விழா குறித்த அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News