காஞ்சிபுரம் அவுலியா தர்கா ரமலான் நோன்பு திறப்பில் பங்கேற்ற இந்துக்கள்

காஞ்சிபுரம் அவுலியா தர்கா ரமலான் நோன்பு திறப்பு நிகழ்வில் திரளான இந்துக்களும் பங்கேற்றனர்.

Update: 2024-03-15 10:44 GMT

ரமலான் மூன்றாம் நாள் நிகழ்வில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.

பெரிய காஞ்சிபுரம் அவுலியா தர்காவில் ரமலான் மூன்றாம் நாள் நோன்பு திறப்பு மக்ரிப் தொழுகை மற்றும் சிறப்பு அன்னதான நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் சைவ, வைணவ ஆலயங்கள் மட்டுமல்லாது பள்ளிவாசல் எனக் கூறப்படும் தர்காவும் மிகவும் புகழ்பெற்றது.

பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் மார்க்கெட் அருகே அமைந்துள்ளது ஹஷ்ரத் காஜா சையது ஷா தர்கா.இங்கு சந்தனக்குடம் விழாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் அங்கு சென்று சிறப்பு பூஜைகள் மேற்கொள்வது வழக்கம்.

இது மட்டும் அல்லாது வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவத்தின் போது, கங்கைகொண்டான் மண்டபம் அருகே மண்டகப்படி நடக்கும் போது முதல் பிரசாதம் மரியாதை இந்த தர்காவுக்கு தான். மேலும் காஞ்சி காமாட்சி அம்மன் பிரம்மோற்சவத்தின் போது நிறைவு விழாவான புஷ்ப பல்லக்கின்போது காமாட்சி அம்மனுக்கு தர்கா சார்பில் பன்னீர்ரோஜா மற்றும் வாசனை திரவியமான பன்னீர் ஆகியவற்றை சமர்ப்பித்து மரியாதை செலுத்துவதும் இந்த தர்காவில் காலங்காலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் இஸ்லாமியர்களின் புனித நோன்பு என கூறப்படும் ரமலான் நோன்பு துவங்கி உள்ள நிலையில், நாள்தோறும் காலை நாலு மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணா நோன்பு மேற்கொண்டு இஸ்லாமியர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

அதன்பின் சிறப்பு தொழுகைக்குப் பிறகு நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இதற்கென தயாரிக்கப்பட்ட சிறப்பு நோன்பு கஞ்சி மற்றும் பழங்கள், ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகளை உண்டு விரதத்தை அன்று முடிப்பர்.


இந்நிலையில் இன்று பெரிய காஞ்சிபுரம் தர்காவில் முதல் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு தொழுகை மற்றும் ரமலான் மூன்றாம் நாள் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.

இது மட்டும் இல்லாது இந்த நோன்பு கஞ்சியை இந்துக்களும் அமர்ந்து அருந்தி உண்டனர். இதனை தொடர்ந்து மக்ரிப் தொழுகைக்கு பிறகு பாத்திஹா து ஆ ஓதி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இனிப்புடன் கூடிய அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

ரமலான் மூன்றாவது நாள் மற்றும் முதல் வியாழக்கிழமை சிறப்பு தொழுகை ஏற்பாடுகளை முகமது இம்தியாஸ் மற்றும் பண்டாரி பரம்பரை குடும்பத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

காஞ்சியில் மட்டும்தான் இந்துக்கள் பண்டிகையில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதும், முஸ்லிம்கள் பண்டிகையில் இந்துக்கள் கலந்து கொண்டு ஒற்றுமை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே அனைத்தும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News