அடகுக்கடை உரிமையாளரிடம் ரூ.10 நகை, பணம் வழிப்பறி: காஞ்சியில் பகீர்

காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் நகை கடை உரிமையாளர் வாகனத்தினை உதைத்து, அதிலிருந்த நகைப்பையை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

Update: 2022-05-06 00:30 GMT

வழிப்பறி கொள்ளை சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சின்ன காஞ்சிபுரம் ,  மூன்றாம் திருவிழா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் விமல்சந்த். இவர் கருக்குப்பேட்டை மெயின் ரோடு பகுதியில்,  அடகுக்கடையை பல ஆண்டுகளாக  நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு எட்டு முப்பதுக்கு கடையை பூட்டிவிட்டு,  தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை டிராவல் பேக்கில் வைத்து பாதுகாப்பாக  தனது இருசக்கர வாகனத்தில் முன்புறம்  வைத்துக்கொண்டு காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தார்.

அய்யம்பேட்டை அம்பேத்கர நகர் பகுதியில் வந்தபோது,   திடீரென தொலைபேசி அழைப்பு வந்ததால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி  வாகனத்தில் அமர்ந்தபடியே செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஹெல்மெட் அணிந்து பல்சர் வாகனத்தில் வந்த இருவர், விமர்சந்த் வாகனத்தை  எட்டி உதைத்து நிலை தடுமாறச் செய்தனர்.

இதில்ம்  வாகனம் சாலையின் பக்கவாட்டில் சாய்ந்த போது வாகனத்தில் இருந்த ஒரு நபர் இறங்கி நகைக்கடை உரிமையாளரின் பையை பறித்துக் கொண்டு இருவரும் மின்னல் வேகத்தில் காஞ்சிபுரம் நோக்கி தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல்துறை ஆய்வாளர் ஜெயவேலுவிடம்  புகார் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து,  சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க  உத்தரவிட்டார். அடகு நகைக்கடை  உரிமையாளர் கொண்டு சென்ற பையில் 132 கிராம் தங்க நகைகளும்,  வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என சுமார் 10 லட்சம் மதிப்பு இருக்கும் எனும் தெரியவருகிறது.

இன்று, அவரது குடும்ப நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதால் கடை விடுமுறை விடப்பட்டு, நகைகளை‌ எடுத்து சென்றதாகவும் ,  இவரது கடையிலிருந்து கிளம்பும்போது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்றது சிசிடிவி காட்சியில்  தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் பார்த்து வழிப்பறி நபர்களை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் சுற்றுப்பகுதி முழுவதும் காவல்துறையினரை உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News