காஞ்சிபுரத்தில் பட்டாசு விற்பனை குறித்து தீயணைப்பு துறை அதிகாரி அறிவுரை

காஞ்சிபுரத்தில் பட்டாசு விற்பனை குறித்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

Update: 2022-10-13 14:00 GMT
பட்டாசு விற்பனையாளர்கள் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னி நிஷா பிரியதர்ஷினி பேசினார்.

இந்தியா முழுவதும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது  வயதினை மறந்து பட்டாசு வெடித்து மகிழ்வது இயல்பான செயலாகவே  உள்ளது. பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்றே சொல்லலாம்.

தற்போது பட்டாசுகள் வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும் அதிகம் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா காலத்தை காரணம் காட்டி பண்டிகை காலம் பெரிய அளவில் கொண்டாடப்படாத நிலையில், கடந்த ஆறு மாத காலமாகவே பொதுமக்கள் அனைத்துப் பண்டிகையையும் உற்சாக வரவேற்புடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

பட்டாசு வியாபாரிகள் தங்களது உரிமத்தை புதுப்பித்தும்,  பொருட்களை வாங்கி விற்பனைக் கடை அமைப்பதை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பட்டாசு விற்பனைக்கு உரிய உரிமம் பெற்று மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அதிக அளவில் இருப்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் முக்கிய  அறிவிப்பாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகயைில் காஞ்சிபுரம் மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினருடன்  பட்டாசு விற்பனை செய்வது  தொடர்பான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில்  தனியார் அரங்கில் நடைபெற்றது . சங்கத் தலைவர் எம். சம்பத் தலைமை தாங்கினார். செயலாளர் துளசிநாதன் பொருளாளர் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிநிஷா பிரியதர்ஷினி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

இந்த தீபாவளியை விபத்தில் இல்லாத தீபாவளியாக கொண்டாட வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாத பாதுகாப்பு இல்லாத தீபாவளியாக பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாத தீபாவளியாக கொண்டாட வேண்டும். அரசு அறிவித்த அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். போதிய இடைவெளியில் நிறுத்தி விற்பனையில் ஈடுபட வேண்டும். பட்டாசு கடை ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சியை அளிக்க வேண்டும். பட்டாசு கடை அருகில் தண்ணீர் வைக்க வேண்டும் . புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பேனர் வைக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். பெட்ரோல் பங்க் அருகில்,  உயர் அழுத்த மின் கம்பிகள் போகும் இடங்களிலும்,  கேஸ் குடோன் அருகிலும் பட்டாசு கடை வைப்பதை தவிர்க்க வேண்டும். விபத்து இல்லாத தீபாவளியாகவும் பாதுகாப்பான தீபாவளியாகவும்  கொண்டாடவும் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

இந்நிகழ்ச்சியில் உதவி தீயணைப்பு அலுவலர்கள் சக்திவேல் , பாஸ்கரன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News