காஞ்சிபுரத்தில் 81 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

கல்லூரிகள், பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 81 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-08-30 06:45 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென தமிழக அரசும், தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகளும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 81 இடங்களில் கொரோனா சிறப்பு  தடுப்பூசி முகாம் இன்று  நடைபெற்று வருகிறது. இதில் 18 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாலாஜாபாத் வட்டத்தில் 15 இடங்களில் 1100  பேருக்கும், ஸ்ரீபெரும்புதூரில் 11 இடங்களில் 4300 பேருக்கும், உத்திரமேரூர் வட்டத்தில் 10 இடங்களில் ஆயிரம் பேருக்கும், காஞ்சிபுரம் நகராட்சி 19 இடங்களில் 4700 பேருக்கும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 9 இடங்களில் 1300 பேருக்கும், குன்றத்தூர் வட்டத்தில் 17 இடங்களில் 3500 பேருக்கும் என மொத்தம் 18 ஆயிரம் பேருக்கு  செலுத்த தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தம், திருமண மண்டபம், பள்ளிகள், சமுதாயக்கூடம், காய்கறி சந்தைகள் என பல இடங்களிலும் முகாம்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் எளிதில் அணுகி தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் பரவலை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags:    

Similar News