வடபழனி பாதயாத்திரை குழு சார்பாக 500 பக்தர்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வேண்டுதல் கோரி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடத்தினர்.

Update: 2023-01-06 08:51 GMT

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு பால்குட அபிஷேக நேர்த்தி கடனுக்கு வந்த வடபழனி பாதயாத்திரை குழுவினரின் ஒரு பகுதியினர்.

கோயில் நகரம் காஞ்சிபுரத்தில் பல எண்ணற்ற நேர்த்திக்கடன் திருக்கோயில்கள் அமைந்துள்ளது. அவ்வகையில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநில மாவட்ட பக்தர்கள் வந்திருந்து தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர்.

வெள்ளிக்கிழமை தோறும் இரவு நடைபெறும் தங்கரத உற்சவத்தை காண பல்லாயிரக்கணக்கானவர்கள் வருகை புரிவதுண்டு. ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட காஞ்சி காமாட்சி அம்மன் சக்தி வாய்ந்தது என்றால் பல்வேறு நடைபாதை குழுவினர் மற்றும் ஆன்மீக பக்தர்கள் அம்மனுக்கு அவ்வப்போது பால்குடம் அபிஷேகம் வெள்ளிக்கிழமைகளில்  நடத்துவது வழக்கம்.

அவ்வகையில், சென்னை ,  வடபழனியிலிருந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், காமாட்சி அம்மனுக்கு பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை இன்று செலுத்தினார்கள்.

சென்னை வடபழனியிலிருந்து ஸ்ரீகாஞ்சி காமாட்சி பக்தர்கள் பாதயாத்திரை சபை சார்பில் இம்மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு 560 பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

அவர்கள் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் அருகேயுள்ள கனகதுர்க்கையம்மன் கோயில் வரை வந்தனர்.பின்னர் அங்கிருந்து காமாட்சி அம்மனுக்கு பால்குடம் எடுத்துக் கொண்டு காஞ்சி சங்கர மடத்துக்கு வந்து மகா பெரியவர் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தனர்.

பின்னர் மீண்டும் சங்கர மடத்திலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க வந்து சேர்ந்தனர். இதனையடுத்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனைகளும் நடந்தன.

மதியம் கோயில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அன்னதானமும் இரவு கோயிலில் தங்கரத உற்சவத்திலும் பாதயாத்திரையாக வந்தவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து பாதயாத்திரைக்குழுவின் தலைவர் எஸ்.மோகன் கூறுகையில்,  தொடர்ந்து 45 வது ஆண்டாக வடபழனியிலிருந்து பாதயாத்திரையாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறோம்.ஆண்டு தோறும் அம்மனுக்கு பாலாபிஷேகமும்,தங்கரத உற்சவத்திலும் பங்கேற்பதாக தெரிவித்தார்.

பாலாபிஷேகம் மற்றும்  சிறப்பு தீப அலங்காரத்தை  காண பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேல்மருவத்தூரில் தற்போது தைப்பூச இருமுடி விழா நடைபெறுவதால் அங்கு சாமி தரிசனம் முடித்து காஞ்சிபுரம் வந்தபோது இது போன்ற நிலை ஏற்பட்டதால் பலர் திருக்கோயிலை சுற்றி வந்து புறப்பட்டு அடுத்த திருக்கோவிலுக்கு செல்ல புறப்பட்டனர்.

மற்றொரு பாதை வழியாக பக்தர்களை சாமி தரிசனத்திற்கும், பாலாபிஷேகத்தையும் காண கோயில் நிர்வாகம் வழி செய்திருக்கலாம் எனவும்,  பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியது மன வருத்தத்தை அளிப்பதாகும் பலர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News