கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ரிங் ரோடு: அமைச்சர் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உடனடியாக ரிங் ரோடு அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-30 12:00 GMT

அமைச்சர் எ.வ.வேலு.

கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு இன்று ஆய்வு  மேற்கொண்டு பயனாளிளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், புதிய மாவட்டம் உருவாகும் போது அதில் சில பிரச்னைகள் இருக்கும். மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளதால் ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகளை சீரமைக்க வேண்டும்.இதன் மூலம் விவசாயம் மட்டுமின்றி குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும்.

கள்ளக்குறிச்சி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ரிங் ரோடு அமைப்பதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும். கல்வராயன்மலை வாழ் மக்களுக்கு தேவையான சாலை வசதிகள் செய்து கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.கள்ளக்குறிச்சியிலிருந்து அடரி வழியாக வேப்பூர் செல்லும் சாலை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை பகுதியில் சாலைகள் அமைப்பதற்கு ஏற்படும் பிரச்னைக்கு வனத்துறை அமைச்சர், செயலர் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு, தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்களிடையே உள்ளாட்சி பிரநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மின்மாற்றிகள் அமைத்துக் கொடுப்பதில் குறைபாடுகள் இருக்கக் கூடாது.

இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவர்கள் அதிக கவனம் எடுத்து செயல்பட வேண்டும். அதேபோல், இல்லம் தேடி கல்வி திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். மக்கள் பிரச்னைக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் மதிப்பு கொடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிக்கு நான் பாலமாக இருந்து செயல்படுவேன் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News