ஓட்டுக்கு பணம் கொடுக்க வாக்காளர் பட்டியல்தயார் செய்யும் அரசியல் கட்சியினர்

கள்ளக்குறிச்சியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு வாக்காளர் குறித்த தெளிவான பட்டியலை அரசியல் கட்சியினர் தயார் செய்து வருகின்றனர்

Update: 2022-02-10 16:46 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு சின்னம் ஒதுக்கப்பட்டதையடுத்து தேர்தல் களம் களைகட்ட துவங்கியுள்ளது.வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இருப்பினும் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை போலவே நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ய அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதற்காக வார்டு வாரியாக தெளிவான பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

வேட்பாளரின் பெயர், அவரின் மொபைல் எண், ஒரு குடும்பத்தில் எத்தனை ஓட்டுகள் உள்ளது? வாக்காளர் வெளியூரில் இருந்தால் தேர்தல் அன்று வந்து ஓட்டு போடுவாரா? என்பது உள்ளிட்ட அனைத்து தகவலையும் குறிப்பிட்டு பட்டியல் தயாராகி வருகிறது. எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கவுரவ பிரச்னைக்கு களமிறங்கியுள்ள ஆளும் கட்சி வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் சொந்த பணத்தை கொடுப்பதற்கு தயாராக உள்ளனர்.

மற்றபடி பணம் கொடுக்கும் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் சற்று சுனக்கமாகவே உள்ளது. ஆனால்  மாவட்டத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வார்டுகள் தவிர்த்து மற்ற அனைத்திலும் வாக்காளர்கள் குறித்து துல்லியமான பட்டியலை தயாரிப்பதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.

இதில் சில சுயேச்சைகள் பரிசுப் பொருட்களாக கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் தேர்தல் நெருக்கத்தில் வாக்காளர்களின் காட்டில் பண மழை பெய்யும் என்பதில் சந்தேகமில்லை. 

Tags:    

Similar News